திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.
இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது