தென்காசி மாவட்டம் கேரள எல்லையை ஒட்டியுள்ள செங்கோட்டையில் கடந்த 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் அருகிலுள்ள குண்டாற்றில் கரைக்கும் பொருட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்றபோது இருதரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தின் போது 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கார்கள் கடைகள் ஏ.டி.எம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் மற்றும் மக்களின் சொத்துக்கள் உடைக்கப்பட்டன. அது சமயம் கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பிலுமிருந்து 40 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வருடம் கரோனா பரவலையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே கொண்டாடுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அவைகளை கரைப்பதற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லவும் தடை விதித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செங்கோட்டையில் நடந்த கலவரச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாகவே செங்கோட்டை நகரைச் சுற்றி போலீஸ் செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு வெளியிடத்திலிருந்து வருவோர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் மேற்பார்வையில் தென்காசி ஏ.டி.எஸ்.பி.ராஜூ, டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300 போலீசார் செங்கோட்டை நகரைச் சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே செங்கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான 4 இடங்களில் தடை உத்தரவை மீறி 4 சிலைகளை நகர இந்து முன்னணியினர் வைத்திருந்தனர். இதையறிந்த போலீசார் வருவாய் துறையினரோடு 4 விநாயகர் சிலைகளையும் பறிமுதல் செய்து அவைகளை பாதுகாப்பாகக் குண்டாற்றில் கரைத்தனர். இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 31 விநாயகர் சிலைகளை கண்காணிப்புக் குழுவினர் அகற்றினர்.