விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட சோழாம்பூண்டி, சோழனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட அயினாம்பாளையம், பெரியார்நகர், முத்தியால்பேட்டை, தென்னம்மாதேவி, பூத்தமேடு மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு, காட்டு நாயக்கன் தெரு, ஆதிதிராவிடர் காலனி உட்பட பல கிராமங்களுக்கு நடந்து சென்று பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் ஆகியோர் பொதுமக்களிடம் பேசியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “திமுக தலைவர் கலைஞர் வழியில் வந்த மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் ஜாதிமத இன வேறுபாடின்றி அனைத்து நலத்திட்டங்களும் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் கிராமப்புறங்களை நகரங்களுடன் இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டதால் கிராமப்புற மக்கள் எளிதாக அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல முடிகிறது. போக்குவரத்து வசதி கிராமப்புறங்களுக்கு கிடைப்பதோடு கிராமப்புறங்களில் விளைவிக்கப்படும் விவசாயிகளின் விளைபொருட்கள் எளிதாக நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடிகிறது.
இங்கு என்னுடன் பிரச்சாரத்திற்கு அமைச்சர் அர.சக்கரபாணியும் வந்துள்ளார். நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்களிடம் கோரிக்கை வைத்த பேருந்து நிறுத்த வசதி, பொதுக்கழிப்பறை வசதி, சாலை வசதிகள் தங்கு தடையின்றி குடிதண்ணீர் வசதி கிடைக்க உட்பட அனைத்தும் தேர்தல் முடிந்தபின்பு படிப்படியாக நிறைவேற்றப்படும். பொதுமக்களின் முக்கியமான கோரிக்கையான பகுதிநேர நியாயவிலைக்கடை உடனடியாக அமைத்துக் கொடுக்கப்படும். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா தொகுதி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதின் மூலம் உங்கள் கிராமங்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் எளிதாக வந்தடையும்.” என்று கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.நாகராஜன், மார்கிரேட்மேரி, பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சாணார்பட்டி விஜயன், கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் க.மும்மூர்த்தி, சோழாம்பூண்டி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், தெய்வசிகாமணி, திண்டுக்கல் மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா, திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய திமுக செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் முருகேசன், நத்தம் பேரூராட்சி மன்றதலைவர் சிக்கந்தர் பாட்சா அகரம் பேரூராட்சி மன்றதலைவர் நந்தகோபால் உட்பட கட்சிபொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.