கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைகோட்டம் கிராமத்தில் விவசாய நிலங்கள் நடுவில் அரசு மதுபானம் கடை திறக்கப்பட்டது.
இந்த மதுக்கடைக்கு குடிக்க வரும் குடிகாரர்கள் செய்யும் அட்டுழியம் அதிகம். இதனால் பெண்கள் விவசாய வேலைக்கு செல்ல முடியவில்லை குடித்து விட்டு பாட்டில்களை சில பேர் அருகில் உள்ள வயல் நிலங்களில் போட்டுவிட்டு செல்வதனால் நெல் சாகுபடி செய்யும் பொழுது பாட்டில் காலில் குத்தி சில சமயங்களில் காயம் ஏற்படுகிறது என பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைத்தனர்
மேலும் நெல் அரைக்கும் போது நெல்லுடன் பாட்டில் கண்ணாடி துகள்கள் கலந்ததால் உணவுக்கு பயன்படுத்த முடியவில்லை. மேலும் கடந்த இரண்டு மாதம் முன்பு அந்த இடத்தில் இரண்டு பேர் குடித்து விட்டு சண்டை போட்டதில் ஒருவர் இறந்து விட்டார். இதனால் அருகில் உள்ள கிராமமக்களும், விவசாயிகளும் பல தொடர் போராட்டங்கள் நடத்தினர். மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துறையினர் என தொடர்ந்து புகார்கள் கொடுத்தனர்.
அதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 28-க்குள் மதுக்கடையை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மே-1 நேற்று வரை மூடவில்லை. அதனால் இன்று கிராமமக்களும், விவசாயிகளும் மதுக்கடையை மூடக்கோரி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மதுக்கடையை மூட உத்தரவிட்டார்.