Skip to main content

"தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது" - தமிழக ஆளுநர் புகழாரம்

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

 

Banwarilal Purohit about Tamil Culture

 

 

பிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாள் நடைபெற்ற இந்த பிரிட்ஜ் தேசிய மாநாட்டில் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு நுண்கலைகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி, முன்னணி மற்றும் மூத்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று மூத்த கடம் இசை மேதை பத்மபூஷண் விக்குவிநாயக்ராம், பரதநாட்டிய மேதை நிருத்ய சூடாமணி சி வி சந்திரசேகரன் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதற்கான விழாவில் வருகை தந்த விருந்தினர்களை பிரிட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் ரகுராமன் அவர்கள் வரவேற்றார். அவர் பேசுகையில், "பிரிட்ஜ் அகாடமியின் 'பிரிட்ஜ் தேசிய மாநாடு' மூன்று நாட்கள் நடைபெறுவதற்கு, பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு அளித்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் கருத்தரங்கம், விவாத மேடை, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இலங்கை மலேசியா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கினார்கள். ஓவிய கண்காட்சி, கர்நாடக இசை மற்றும் தொன்மையான இசைக் கருவிகளுக்கான கண்காட்சி, பரதநாட்டியகலைக்கான பிரத்யேக கண்காட்சி ஆகியவற்றின் பின்னணியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். இவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Banwarilal Purohit about Tamil Culture

பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், "உலகஅளவில் இந்திய நுண்கலைகள் தனித்துவமான அடையாளம் கொண்டது. மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறும் இசைவிழா உலகளவில் புகழ்பெற்றது. அந்த தருணத்தில் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் நான் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். வடஇந்திய மற்றும் ஏனைய கலைஞர்களுடன் ஒப்பிடும் போது,தென்னிந்திய கலைகள் மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியம் கொண்டது. நுண்கலைகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றிவரும் ப்ரிட்ஜ் அகாடமியின் சேவையை நான் மனதார வரவேற்கிறேன்" என்றார். இதைத்தொடர்ந்து ப்ரிட்ஜ் அகாடமியின் அறக்கட்டளை உறுப்பினரான செல்வகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்