Skip to main content

வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை

Published on 07/09/2017 | Edited on 07/09/2017

வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளைம் என்ற ஊரைச்சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 60) விவசாயி. இவரது மனைவி சுலோச்சனா (வயது-55). தனது மனைவியின் பெயரில் விவசாய பணிக்காக திருப்பூரில் உள்ள மகேந்திரா வங்கியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு டிராக்டர் வாங்க ரூ.7-இலட்சம் கடன் பெற்றுள்ளார்.

   இந்த கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.98 ஆயிரம் தவணைத்தொகை செலுத்த வேண்டும். அதன்படி கடன் வாங்கிய தேதியில் இருந்து முதல் தவணையான ரூ.98 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு ஏற்பட்ட வறட்சி காரணமாக சரியான அளவு விவசாயம் செய்யமுடியாமல் போனதால் கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இதுகுறித்து வங்கியில் இருந்து நினைவூட்டல் கடிதம் வந்துள்ளது.

அதற்கு வெள்ளியங்கிரி தன்னால் தற்போதைக்கு கடனை கட்ட முடியாத நிலையில் இருப்பதாகவும், தவணையை கட்ட கால அவகாசம் தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் கடனை கட்டாததால் நீதிமன்றம் சென்று கடனுக்காக டிராக்டரை பறிமுதல் செய்ய ஆணை பெற்றனர்.

பறிமுதல் கடிதத்துடன் நேற்று காலை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் மலையம்பாளையம் சென்று வெள்ளியங்கிரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை பறிமுதல் செய்து பல்லடம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

அப்போது வெள்ளியங்கிரி வீட்டில் இல்லாத காரணத்தால், அவருக்கு ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் பல்லடம் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பல்லடம் காவல் நிலையத்திற்கு வந்த வெள்ளியங்கிரி காவல் நிலையத்தில் இருந்த வங்கி அதிகாரிகளுடன் விவசாயி வெள்ளியங்கிரி டிராக்டரை பறிமுதல் செய்தது குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது தற்போதுதான் மழை பெய்துள்ளது. இன்னும் ஆறு மதத்திற்குள் முறையாக கடனை கட்டிவிடுகிறேன் என்று கேட்டுள்ளார். அதற்கு வங்கி அதிகாரிகள் நாங்கள் என்ன செய்வது, இது மேல் அதிகாரிகளின் உத்தரவு, நீதிமன்ற ஆணைப்படி நாங்கள் செயல்பட வேண்டியுள்ளது என்று தெரிவிதுள்ளனர்.

இதனால் மனமுடைந்த வெள்ளியங்கிரி ஏற்கனவே தன் கையோடு எடுத்து வந்திருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்துள்ளார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் இதை பார்த்துவிட்டு உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வெள்ளியங்கிரியின் உறவினர்கள் பல்லடம் என்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெள்ளியங்கிரி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்