திண்டுக்கல்லில் கடன் வழங்குவதாகக் கூறி வங்கி மூத்த மேலாளர் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி சொக்கலிங்கம் திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேலிடம் நேற்று கொடுத்த மனுவில், குன்றக்குடி அருகே ஆவிடை பொய்கையில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறேன். திண்டுக்கல் அலகாபாத் வங்கி மூத்த மேலாளர் சொர்ண பிரியா 2017ல் மருத்துவ ஆலோசனைக்காக வந்தார். மருத்துவமனை விரிவாக்கத்திற்கு கடன் வழங்குவதாக கூறினார். விவசாய கடன் என்பதால் வட்டி குறைவாக இருக்கும் என நினைத்து நில பத்திரத்தை கொடுத்தேன். பின் வங்கியில் கணக்கு துவங்கினேன். மூத்த மேலாளர் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்க முடியும் என்றார். ஆனால் ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கினார். மீதி ரூ.44 லட்சத்தை தராமல் இழுத்தடித்தார். என்னுடைய நிலப்பத்திரமும் அவரிடம் தான் உள்ளது. என்னுடைய பெரியல் “ஹெர்பல் ஹேர்” என்ற பெயரில் ரூ.50 லட்சம் கடன் வழங்கியதாக மோசடி செய்து உள்ளார்.
மேலும் பலரிடம் ஆவணங்களை வாங்கி கொண்டு ரூ.3 கோடிக்கும் மேல் ஏமாற்றியுள்ளார். அவர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். வாங்காத கடனுக்கு வங்கியில் கடனை செலுத்தும்படி இப்போது கூறுகின்றனர். சொர்ணபிரியா பலரிடம் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுசம்மந்தமாக காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் இந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி அதிரடி விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்!