தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% சதவீதத்தில் இருந்து 12% சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. அதில் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாமல் தவித்து வரும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியதன் மூலம் அரசுக்கு மேலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான கோடி கடன் சுமையில் தமிழக அரசு உள்ள நிலையில், ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. மாநில நிதி வருவாயைப் பெருக்கி தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.
அதே போல் தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்படி ஊதியம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுகிறதோ! அதனை பின்பற்றி தமிழகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டு ஒரு முறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கும் வகையில் குறைந்த பட்ச ஊதியச்சட்டம் 1948-ல் உடனடியாக திருத்தம் மேற்கொண்டு புதிய ஊதியத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக இளைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த புதிய ஊதியத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவையோ அல்லது ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட குழுவையோ தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் இளைஞர்களின் நலன் காக்கப்படுவதோடு அவர்களின் வாழ்க்கை, சமுதாய வளர்ச்சி, மாநிலத்தின் வளர்ச்சி கட்டாயம் உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.