தமிழகத்தில் திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் எடப்பாடியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவருகிறார். அதுபோல் திண்டுக்கல்லில் ஒடுக்கம் பகுதியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்க இருக்கிறார். இப்படி புதிதாக உருவாகப்போகும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திண்டுக்கல்லில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் அமைய இருக்கிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் அங்கே நடைபெற இருப்பதால் கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் மிகப்பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டும் பயனாளிகள் கட்சி காரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்காரும் அளவிற்கு பல ஏக்கர் நிலங்களை சுத்தப்படுத்தி மேடை அமைக்கபட்டுள்ளது.
இந்த விழா மேடைக்கு முன் புறத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரின் மெகா சைஸ் கட்டவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் காவேரி காப்பாளரே என்ற பெயரில் காவேரி அணை போல் செட்டிங்ஸ் வைத்தும் அதில் தண்ணீர் நிரம்பி வடிவது போலவும் வைத்துள்ளனர். அதற்கு கீழ் விவசாய நிலங்களான கரும்பு,வாழை, நெல் பயிர்கள் நடப்பட்டு ஒரு விவசாயம் தோட்டம் போலவே வடிவமைத்து இருக்கின்றனர். அதைக்கண்டு அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களும் சாரை சாரையாக வந்து விவசாய நிலங்கள் போல் இருப்பதைக் கண்டு சந்தோஷத்தில் மூழ்கி விட்டனர். அதோடு அங்கு நின்று புகைப்படம் எடுப்பதும் செல்ஃபி எடுப்பதுமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் உடனே சென்னையிலிருந்து மதுரை வந்து மதுரையில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ, விழா நடைபெறும் முகப்பில் ஒரு தோட்டம் போல் வாழை, நெல், கரும்பு போன்ற விவசாயம் நிலங்கள் போலவே தத்துரூபமாக இருப்பதைக்கண்டு பூரித்துப் போய்விட்டார். அதோடு நெல் பயிர்களுக்கு இடையே உள்ள வரப்புகளில் நடந்து சென்று நெல் பயிர்களை பார்வையிடும் வாழை, கரும்புகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து விழா நடக்கும் மேடைக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளையும் துரிதப்படுத்த சொல்லி வலியுறுத்தினார். அதேபோல் விழாவுக்கு வரும் பயனாளிகள் எந்த இடத்தில் உட்காருகிறார்கள், அதுபோல் பொதுமக்கள் உட்காருகிறார்கள் போன்ற இடங்களையும் பார்வையிட்டார்.
அதன் பின் விழா மேடைக்கு வெளியே எந்தெந்த இடத்தில் கார் பார்க்கிங் இருக்கிறது என்பதையும் பார்வையிட்டார். முதன்முதலாக முதல்வர் எடப்பாடி திண்டுக்கல் அரசு விழாவில் கலந்து கொள்வதால் அதில் ஏதும் குறைகள் இருந்து விடக்கூடாது என்பதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரவு பகல் பாராமல் தீவிரம் காட்டி வருகிறார். இதில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட செயலாளர் மருதராஜ். கூட்டுறவு வங்கி தலைவர் ராஜ்மோகன்,அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன், திண்டுக்கல் அர்பன் பேங்க் தலைவர் பிரேம் உள்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் உடனிருந்தனர்.