'தி ஃபேமிலி மேன் – 2' என்கிற ஹிந்தி வெப் சீரிசை அமேசான் ப்ரைம் விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறது. இதற்கான ட்ரைலர் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ட்ரைலரில் வெளியான பல காட்சிகள் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்துவதாகவும், அவர்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிப்பதாகவும் இருக்கிறது என சுட்டிக்காட்டி, அந்தத் தொடரை ரத்து செய்ய வேண்டும், ட்ரைலரைத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களை எழுப்பியிருந்தார். இதனால், இந்த வெப் தொடர் குறித்த விவகாரங்கள் பரபரப்பானது.
இந்த நிலையில், சர்ச்சைகளை ஏற்படுத்தும் இந்த தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவசர கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “'தி ஃபேமிலி மேன் – 2' எனும் ஹிந்தி மொழியில் வெளியாகியுள்ள வெப் தொடரின் ட்ரைலர் காட்சிகள் மிகவும் கண்டனத்திற்குரியது. அந்த ட்ரைலரில் ஈழ விடுதலையைப் பற்றி இழிவாகவும், கொச்சையாகவும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை ஏற்க முடியாது. அத்தகைய காட்சிகள் கண்டனத்திற்குரியது.
தமிழீழ மக்களின் நீண்டகால விடுதலைப் போராட்டம் ஜனநாயக ரீதியாக நடந்தவை. அத்தகைய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியிருப்பது வேதனையைத் தருகிறது. புகழ்ப்பெற்ற தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான அவமானங்களும் தூண்டுதல்களும் நிறைந்த ஒரு தொலைக்காட்சித் தொடர், எந்த விதத்திலும் பரந்த மதிப்பைக் கொண்டதாக கருத முடியாது. தமிழ் மொழி பேசும் நடிகை சமந்தாவை பயங்கரவாதியாக முத்திரைக் குத்துவது தமிழர்களின் பெருமைக்கு எதிரானது. இந்த வகையிலான, கீழ்த்தரமான, கேவலமான பிரச்சாரத்தை செய்யும் இந்த தொடரை தமிழகம் பொறுத்துக்கொள்ளாது.
இந்த தொடர், ஈழத் தமிழர்களை மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்களையும் மிகவும் புண்படுத்தியிருகிறது. இந்த சூழலில், 'தி ஃபேமிலி மேன் – 2' வெப் தொடரை அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.