மதுரை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த மருது சேனை கட்சியின் பிரமுகரும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளருமான ஆதிநாராயணனுக்கு, அவரது ஆதரவாளர்கள் குடம் குடமாய் பாலாபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் மருது சேனை கட்சியும் போட்டியிட்டது. வேட்பாளராக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆதிநாராயணன் போட்டியிட்டார். அதே தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கடும் பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொலை வழக்கு காரணமாக மதுரை மத்திய சிறையில் ஆதிநாராயணன் அடைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் ஆதிநாராயணனை முன்னிலைப்படுத்தி கலவரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்குறிப்பிட்ட கொலை வழக்கில் ஆதிநாராயணனுக்கு பிணை கிடைத்த நிலையில், நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர். அதுமட்டுமன்றி குடம் குடமாய் அவர் மீது பாலைக் கொட்டி அபிஷேகம் செய்தனர். மேலும் 50- க்கும் மேற்பட்ட ஆளுயர மாலைகளை அணிவித்து ஆதிநாராயணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து புறப்பட்ட அவரது ஆதரவாளர்களுடனான பேரணி, மதுரை தோப்பூர் சுங்கச்சாவடியைக் கடந்து எவ்வித தடையுமின்றி கார்களின் அணிவகுப்பு சென்றதை பொதுமக்கள் மிகுந்த வியப்புடன் பார்வையிட்டனர். இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.