சேலத்தில் சாலையில் தேங்கிய மழைநீரில் பரிசல் ஓட்டி, நூதன முறையில் மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் சேலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் (21/10/2019) இரவு 7.45 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல கனமழையாக உருவெடுத்தது. இரவு 10.00 மணியளவில் ஓய்ந்த மழை, நள்ளிரவுக்கு மேல் மீண்டும் பெய்யத் தொடங்கியது.
சேலம் மாவட்டம் முழுவதுமே நல்ல மழை பெய்திருந்தது. சோளம்பள்ளம், சீலநாயக்கன்பட்டி, புதூர், தளவாய்ப்பட்டி, சித்தனூர், மாநகர பகுதியில் 4 சாலை, 5 சாலை, சூரமங்கலம், ராஜாராம் நகர், ஜான்சன்பேட்டை, சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, நாராயணநகர், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளிலேயே தண்ணீர் குளம்போல் தேங்கின.
இந்நிலையில், சேலம் & நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே சர்வீஸ் சாலையின் இருபுறமும் மழைநீர் குளமாகத் தேங்கி நின்றது. போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் நீர் முழுமையாக வடிவதற்கு பல மணி நேரம் ஆனது. இதனால் அந்த சாலையில் இயல்பாக செல்ல முடியாமல் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, சீலநாயக்கன்பட்டி ஊற்றுமலை பகுதியில் சர்வீஸ் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் பரிசல் இயக்கி நூதன முறையில் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சாக்கடை கால்வாய்களை தூர்வாரி, தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிசலில் பயணித்தபடியே முழக்கமிட்டனர். சாலையில் தேங்கி நிற்கும் மழைநீருடன், கழிவு நீரும் கலப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆவதாகவும், அதனால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, பரிசல் ஓட்டி வந்த நபர்களிடம் சமாதானம் செய்தனர். மேலும், கால்வாய் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விட்டனர். சீலநாயக்கன்பட்டி பகுதி வாழ் மக்களின் நூதன எதிர்ப்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.