ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சாய, சலவை ஆலைகள், உணவகங்கள் என பல்வேறு தொழிற்சாலைகளுக்கு மாவட்டத்தின் வெளியூரிலிருந்து லாரிகள், டெம்போ மூலம் விறகுகள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு விறகுகளை ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் உரிய அனுமதியின்றி வருவதாக ஈரோடு கோட்டாட்சியர் கண்டுபிடித்திருக்கிறார். அவரது உத்தரவின் பேரில் ஈரோடு தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிகாலை சென்னிமலை ரோடு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது விறகுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரிகளை ஓட்டி வந்தவர்களிடம் ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் 11 லாரிகளில் ஏற்றி வந்த விறகுகளுக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் கிடைத்ததும் லாரியின் உரிமையாளர்கள் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த லாரிகள் வரிசையாக நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"சத்தியமங்கலம் பர்கூர் போன்ற காடுகளில் சந்தன மரம், தேக்கு மரம், ஈட்டி போன்ற விலைமதிப்பற்ற மரங்களை வெட்டி கடத்தல்காரர்கள் கடத்துகிறார்கள். அவர்களுக்கு இதே போலீசார்களும், அதிகாரிகளும் ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் ஏதோ கஞ்சிக்கு பாடுபடும் சாதாரணப்பட்டவர்கள் காட்டுக்குள் விளைந்த முள்வேலி போன்ற மரங்களை அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் விலைபேசி அவற்றை வெட்டி தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று கொடுத்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் என்ன ஆவணம் என்று எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் நீண்ட காலமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இடத்தின் உரிமையாளர்களிடம் விலைபேசி வாங்கியதற்கான பட்டியலை காட்டினால் இது ஆவணம் இல்லை என்கிறார்கள்.
''கடத்தல்காரர்களுக்கு ஒரு நியாயம் கஞ்சிக்கு பாடுபவர்களுக்கு ஒரு நியாயமா" என வேதனையுடன் புலம்புகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட விறகு லாரி ஓட்டுனரகள் மற்றும் உரிமையாளர்கள்.