தொட்டில் குழந்தைகள் அடிக்கடிக் அழுவதால் அந்த குழந்தை தொட்டிலை அடிக்கடி ஆட்ட பெற்றோர்கள் நித்திரை இழந்து கண்விழித்து காத்திருக்க வேண்டும். ஆனால் தான் அனுபவித்த சிரமத்தையடுத்து கிராமத்து இளைஞர் ஒருவர் தொட்டிலை ஆட்டிவிட இயந்திரத்தை வடிவமைத்துவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வீரமணி (38). தன் சுய சிந்தனையில் தொடர்ந்து எதையாவது வடிவமைத்து வருகிறார். அதனால்தான் அவருக்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழும் கிடைத்திருக்கிறது.
ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றியது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை என்ற நிலையில் தன் வீட்டு ஓட்டில் விழும் மழைத் தண்ணீரை அப்படியே குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று அருகில் பாழடைந்து கிடந்த கிணற்றை சீரமைத்து தண்ணீர் தொட்டியாக மாற்றி அதில் சேமித்து பயன்படுத்தினார். மரக்கன்றுகளை வைத்து குழாய்கள் மூலம் வேர்களுக்கு தண்ணீரை அனுப்பி தண்ணீர் சிக்கனத்தை பயன்படுத்தினார். பழுதான பேன்களின் மூடிகளை ஒரு இரும்பு ஏணியில் அடுக்கி காய்கறிக் கூடையாக மாற்றினார். புயலில் சாய்ந்த தென்னை மரங்களை துண்டுகளாக வெட்டி அழகிய இருக்கைகள செய்து வைத்தார். பழைய கலப்பை உள்ளிட்ட விவசாய கருவிகளை சேகரித்து சேமித்தும் வருகிறார்.
இந்தநிலையில்தான் தன் மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறந்து அந்த குழந்தைகளை இரவு பகலாக கவனிக்க முடியாமல் மனைவி அவதிப்படுவதைப் பார்த்து அவதிப்பட்ட வீரமணியின் புதிய சிந்தனையில் உதித்தது குழந்தை தொட்டிலை ஆட்டும் இயந்திரம்ஒன்றை உருவாக்கியுள்ளார். பழைய இரும்புக் கடைக்குச் சென்று இரண்டு வைப்பர் மோட்டார்களை வாங்கி வந்து அதில் தொட்டிலை ஆட்டிவிடுவது போல வடிவமைத்தவர் வேகத்தை கட்டுப்படுத்த பேன் ரெகுலேட்டரை இணைத்தார். குழந்தைகளுக்கு தாலாட்டு பாடவும் மெல்லிசையும் கேட்க சி.டி. பிளேயருடன் ஸ்பீக்கர்களை பொருத்தினார். மெல்லிசையும் இயந்திரங்கள் தொட்டிலை ஆட்டிவிட குழந்தைகள் நிம்மதியாக தூங்கினார்கள்.
தன் மனைவியின் சிரமமும் குறைந்ததாக கூறுய வீரமணி என் குழந்தைகள் மட்டுமல்ல என் நண்பர்களின் குழந்தைகளுக்காகவும் இந்த தொட்டில் சென்று அவர்களின் அழுகையை நிறுத்தி வருகிறது என்றார்.