கரோனா வைரஸ் குறித்த முறையான முன்னெச்சரிக்கை தகவல்களை உலக சுகாதார அமைப்பு தரவில்லை என்கிற குற்றச்சாட்டை அமெரிக்கா போன்ற சில நாடுகள், அவ்வமைப்பு மீது குற்றம்சாட்டிவருகிறது. அதற்கு காரணம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை மட்டுமே தாக்கும் என்றது, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை அறிகுறி என்றது, பின்பு அறிகுறி வெளியே தெரியாது என குழப்பியது. இப்படி பல முரண்பாடான அறிவிப்புகளை அது வெளியிட்டது. இது மருத்துவ உலகத்தை மட்டுமல்ல, பொதுமக்களையும் வெகுவாக குழப்பி, பயத்தில் இருக்க வைத்துள்ளது.
இந்நிலையில் பிறந்து ஒரே நாளான குழந்தைக்கு கரோனா டெஸ்டில் பாசிட்டிவ் என வர அதிர்ச்சியாகியிருக்கிறார்கள் அக்குழந்தையின் உறவினர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், காட்டாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கர்பமாக இருந்துள்ளார். அவர் தொடர்சியாக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுவந்துள்ளார். அப்படி சென்று வந்தவருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் குழந்தை பிறப்புக்கான தேதியும் நெருங்கியது.
ஜூன் 10ந்தேதி அந்த இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு சில ஆரம்பகட்ட பரிசோதனைகளை நடத்துவர், அதன்படி கரோனா பரிசோதனையும் நடத்தியதில் அந்த குழந்தைக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. பிறந்து ஒரேநாளான குழந்தைக்கு என்ன சிகிச்சை அளிப்பது, தாய்பாலே சிறந்த மருந்தென அதையே தரச்சொல்லி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் அந்த குழந்தையை தந்தை உட்பட யாரிடமும் காட்டாமல் தனிஅறையில் தாயுடன் வைத்து கண்காணித்துவருகின்றனர். தாய் மற்றும் குழந்தை இருவரும் நலம் என்கிறார்கள் மருத்துவர்கள் தரப்பில்.
கரோனாவால் 10 வயது வரை குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் கரோனா அவர்களுக்கு வந்த வேகத்திலேயே போய்விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 12ந் தேதி வரை 636 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஜூன் 2ந்தேதி மட்டும் 50 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இந்த குழந்தையும் அடக்கம்.
தற்போதுவரை சுமார் 393 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர், 3 பேர் இறந்துள்ளனர். மீதிநபர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.