Skip to main content

தரமற்ற சாலையால் ஆம்புலன்சிலேயே பிரசவம்! - தாயும் சேயும் நலம்!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

Baby born in an ambulance ..!

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கீழ்கொத்தூர் கிராமத்தில் இருந்து 108 கட்டுப்பாட்டு அறைக்கு, பிப்ரவரி 3ஆம் தேதி இரவு, 11:42 மணிக்கு குணசேகர் என்பவர் ஃபோன் செய்து, "தனது மனைவி சிந்து, பிரசவ வலியால் துடிக்கிறார். மருத்துவமனை செல்ல வழியில்லை, ஆம்புலன்ஸ் வரவேண்டும்" எனக் கேட்டுள்ளார். உடனடியாக, அணைக்கட்டு பகுதியில் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்சை எடுத்துக்கொண்டு ஓட்டுநர் பாண்டியன், மருத்துவ உதவியாளர் சரஸ்வதி ஆகியோர் விரைந்து சென்றுள்ளனர். அங்கு 20 வயதேயான குணசேகரனின் மனைவி சிந்து, பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்துள்ளார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ்சில் ஏற்றிக்கொண்டு வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்தனர்.

 

கீழ்கொத்தூர் கிராமத்தின் வெளியே செல்லும் வழியில் சாலை சரியாக இல்லாததால், வாகனம் வேகமாகச் செல்ல முடியவில்லை. சிந்துவிற்கு பிரசவ வலி அதிகரித்து, இதனால் வேறுவழியின்றி ஆம்புலன்ஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளர் சரஸ்வதி பிரசவம் பார்த்துள்ளார். நள்ளிரவு 12:10 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. முதலுதவி முடிந்தபின், வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

 

தற்போது குழந்தையும் தாயும் நலமாக உள்ளார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரத்துக்கு உடனடியாகப் பிரசவம் பார்த்து குழந்தை நன்றாகப் பிறக்க வழிசெய்த மருத்துவ உதவியாளருக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர். அதேநேரத்தில், சாலை சரியில்லாமல் இருப்பதே சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு வரமுடியாமல் போனதற்கு காரணம், சாலைகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்