தென்மாவட்ட அரசியலை தன் கண் அசைவில் வைத்திருந்தார் திமுகவின் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி. 2012ல் அவரது ஆதரவாளர்களின் ''இனி ஒரு விதி செய்வோம்'' என்ற போஸ்டர் நகரெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்த, அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் திமுக தலைமை அனுப்ப அடுத்தடுத்து அழகிரியின் கோபம் ஸ்டாலின் மீது திரும்பியது. ''தலைவராக கலைஞரை மட்டும்தான் ஏற்றுகொள்ளமுடியும் அவர் இடத்தில் வேறு யாரையும் வைத்துபார்க்க முடியவில்லை'' என்று நேரில் கலைஞரிடமே வாக்குவாதம் முற்றியதாக செய்திவர தொடங்கியது. கடைசியாக அழகிரி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட பின்பு எப்படியும் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துவிடுவார்கள் என்ற அசராத நம்பிக்கையில் அவரின் ஆதரவாளர்கள் இருந்தனர்.
கலைஞரின் மறைவின்போது ஒன்றாகிவிடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். கலைஞரின் உடல் அடக்கத்தின்போது, ஸ்டாலினும் அழகிரியும் அருகருகே இருந்தது, தேசிய கொடியை தம்பிக்காக விட்டுகொடுத்தது போன்ற விஷயங்கள் எல்லோராலும் உற்றுநோக்கவைத்தது. இதற்கிடையில் ரஜினி கலைஞரின் உடலை பார்க்க வந்தபோது அழகிரியை தேடிபோய் பார்த்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசபட்டது. இவ்வளவு நடந்த பிறகும் அழகிரியை சேர்பது பற்றி யாரும் பேசாதது அழகிரிக்கு ஏமாற்றமாக இருந்தது. பல லட்சம் பேரை திரட்டி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணியாக செல்ல வைத்தது. அதுவும் எதிர்பார்த்தபடி அமையாததால் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் ஆதரவாளர்கள் அவரை விட்டு விலக விலக விரக்தியின் விழும்பிற்கே சென்ற அழகிரி, திமுகவுக்கு எதிரான கருத்தை மீண்டும் எழுப்ப தொடங்கினார்.
இந்திலையில் அவருடன் எப்பவும் கூடவே இருக்கும் மன்னனே தீடீரென ஸ்டாலினை சந்திப்பதாக செய்தி பரவ அவரை தொடர்புகொண்ட அழகிரி, ''ஏன்யா என்னாச்சு'' என கேட்க, ''அப்படியெல்லாம் இல்லை அண்ணே... நான் என்றும் உங்ககூடதான் என் சாவுவரை என அவர் சொல்ல'', ''கொஞ்சம் பொறுமையாக இருங்க முக்கிய நகர்வு இருக்கு''... என்றதாக அவரின் நட்பு வட்டாரத்தில் விசயம் பரவி அது பத்திரிக்கைக்கு வந்தது.
அது பற்றி அவரின் முகாமில் உள்ளவரிடம் என்னதான் செய்யபோகிறார் அழகிரி? என நாம் கேட்டோம், துரையின் சொத்துக்கள் முடக்கம் என்று நீதிமன்ற அறிவிப்புக்குப் பிறகு அழகிரி ரொம்ப அப்செட்டில் கொடைகானலில் இருக்கிறார். அங்கு முக்கிய ஆடிட்டர் அவரை சந்தித்ததாக சொல்கிறார்கள். இந்த சமயத்தில்தான் ரஜினி தன் ரசிகர்களுக்கு ''சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்'' என அறிக்கை விட்டார். அடுத்த சில மணி நேரங்களில் அழகிரியோடு நெடுநேரம் பேசியதாக சொல்லபடுகிறது. இதற்கு பாஜகவும் பச்சைக் கொடி காட்டியதாகவும், தமிழகத்தின் திராவிட கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரான கலைஞரின் மூத்த வாரிசை ரஜினியின் தளபதியாக நிறுத்தி திமுகவிற்கு சரியான நெருக்கடியை கொடுக்க இதை விட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது. அழகிரியை பாஜகவுக்கு எவ்வளவோ பேசிப்பார்த்தும் கலைஞரின் மகனாக இருப்பதால் என்னால் பா.ஜ.கவிற்க்கு வரமுடியாது என்று சொன்னதனால் இந்த மூவ் வை பாஜக கையில் எடுத்திருப்பதாக சொல்லபடுகிறது.
அழகிரி முகாமில் உள்ள தளபதிகளில் ஒருவரிடம் பேசினோம் ”அண்ணே எப்பவுமே ரஜினியோடு நெருக்கமாக இருப்பவர் சென்னைக்கு போறபோது கட்டாயம் ரஜினியை பார்க்காமல் வருவதில்லை. இப்போது அடிக்கடி ரஜினியோடு பேசுகிறார். அதுமட்டும் உண்மை. மதுரையில் இருக்கும் போது பேட்டை படத்தின் முதல் ஷோ பார்த்துவிட்டு நெடுநேரம் பேசி கொண்டு இருந்தார்.
சொல்லமுடியாது எதுவும் நடக்கலாம் ”அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு அழகிரி அண்ணே தயாராவது மட்டும் புரியுது அடுத்த ரவுண்டு மிக பெருசா அடி எடுத்து வைக்கபோகிறார் அதில் எங்களோடு தமிழகத்தின் மிக மிக முக்கிய தலைவர்கள் கைகோர்பார்கள் அது மட்டும் நிச்சயம். தேர்தல் வேலைகளில் அண்ணனை அடிச்சுக்க முடியாது. யாரை தூக்கணும் யாரை சேர்க்கனும் எல்லாம் அண்ணனுக்கு அத்துபிடி. அது தனது அப்பா கலைஞரிடமிருந்து அரசியல் காய் நகர்த்தலை கத்து கொண்டவர். புலிகுட்டிக்கு பாய கத்துகொடுக்கணுமா? பாருங்க அடுத்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்க்கு ஒரு வித்தியாசமான தேர்தலாக அமையும் அதில் அண்ணனின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.
நாம் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் [தனது பெயரை போடவேண்டாம் என கேட்டுக்கொண்டார்] நம்மிடம், நீங்கள் சொல்வது என் காதுக்கும் வந்தது. ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோச்னையின்படி, எங்கள் தலைவரின் அரசியல் தளபதியாக அழகிரி களத்தில் இறங்கபோகிறார் என்ற தகவல் வந்தவண்ணம் இருக்கிறது.
அப்படி ஒன்று நடந்தால் தென்மாவட்டம் மட்டுமில்லை. தமிழக முழுவதுமே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும். தமிழகத்தின் தவிற்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த கலைஞரின் மேல் தலைவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. முறையாக தலைமையிடத்தில் இருந்து அறிவிப்பு வரட்டும். இப்போதுதான் அதுவும் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்பதுபோல் இப்ப ரெண்டு லட்டு திண்ண ஆசை அதிகரிச்சு சுறுசுறுப்பா களத்தில் இறங்க தயாராக இருக்கிறோம் ரஜினி ரசிகர்களுக்கு புது நம்பிக்கை பிறந்திருக்கு சார் என்றனர்.