புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் 15 நாட்ளுக்கு முன்பு 7 வயது சிறுமி, அதே பகுதியைச் ஏசாமிவேல் (எ) ராஜா என்பவரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தக் கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள், உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள் போராட்டங்களை நடத்தினார்கள்.
உடனடியாகக் கொலைகாரனை கைது செய்தனர் போலிசார். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்கியதைத் தொடர்ந்து தி.மு.க., தே.மு.தி.க., இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்ட பலரும் நிவாரணம் வழங்கி ஆறுதல் சொன்னார்கள்.
இந்த நிலையில் சிறுமியைப் பறிகொடுத்த குடும்பத்தினர் கடும் மனவேதனையில் இருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உடனடியாக அவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளித்து அவர்களை அதிலிருந்து மீட்க உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தலைமையிலான குழுவினர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று சிறுமியின் பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கி அதிலிருந்து மீள மருந்து மாத்திரைகளும் வழங்கினார்கள்.
இந்த நிலையில் நேற்று ஏம்பல் குழந்தை கொலை வழக்குக் கைதியை புதுக்கோட்டை சிறையில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்த பிறகு அங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை கூட்டம் அதிகம் இருந்ததால் தப்பி ஓடிவிட்டதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
தப்பி ஓடிய ராஜாவை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் போலிசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.