தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் செந்தில்குமார் (45). கூலித் தொழிலாளி. அவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும் யாழினி, சாலினி (8) என்ற இரண்டு பெண் குழந்தைகளும், கிஷோர் (4) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தை மாற்றுத்திறனாளியாக உள்ளார்.
நேற்று முன்தினம் (16.09.2021) இரவு செந்தில்குமார், பேராவூரணி பேருந்து நிலையம் பகுதியில் ஒரு நபர் கஞ்சா போதையில் பெண்களைத் தரக்குறைவாக பேசியதைக் கண்டித்துள்ளார். அப்போது சில கடைக்காரர்களுடன் செந்தில்குமாருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல நேற்று இரவும் பேருந்து நிலையம் பகுதிக்குச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து செந்தில்குமாரின் உறவினர்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். அதேசமயம் போலீசாரும் அங்கு விரைந்தனர். செந்தில்குமாரின் உடலை மீட்டு, காவல்துறையினர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
செந்தில்குமாரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு, கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்குப் பொதுமக்களும் குவிந்துவருவதால் கூடுதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியினர் சிலர் கூறும்போது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் அதிகமான கஞ்சா விற்பனை நடக்கிறது. பேராவூரணியில் இருந்து கடற்கரை பகுதிக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதிக்கும் அனுப்புகின்றனர். இந்தக் கஞ்சா போதையால் இளைஞர்கள் ஏராளமானவர்கள் மனநோயாளிகளைப் போல சுற்றுகிறார்கள். இந்தக் கஞ்சாவை ஒழித்தால் இதுபோன்ற கொலை மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கலாம்” என்றனர்.