தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. பல்வேறு தொடர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கரோனா தடுப்பு, நிவாரணத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்து தங்களால் முடிந்த நிதியை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.
அதேபோல், நேரிலும் சென்று முதல்வரைச் சந்தித்து கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நிதிகளை பலர் அளித்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளனர். சபாநாயகர் நீங்கலாக 132 திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை ( ரூபாய் 1.37 கோடி ) திமுக அரசு கொறடா கோவி.செழியன் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.