ஆண்டுதோறும் தீபாவளிக்குச் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் துவங்கப்படும் அதே போல இந்த ஆண்டும் கடைகள் வரும் 27ம் தேதி துவங்கப்படும் எனச் சென்னை பட்டாசு விற்பனையாளர் நலச் சங்கத் தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தீவுத்திடலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “27ம் தேதி முதல் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். கரோனா நோய்த் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வழியில் ஒரே நேரத்தில் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பட்டாசு வாங்க வரும் விற்பனையாளர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விற்பனை நடத்தப்படும். தீவுத் திடலில் நடைபெறும் பட்டாசு விற்பனை காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும்.
கடந்த ஆண்டு 650 கடைகள் வரை சென்னையில் பட்டாசு விற்பனைக்காக அங்கீகாரம் பெற்றது. ஆனால், இந்த ஆண்டு 100 கடைகள் கூட இதுவரை அங்கீகாரம் பெறவில்லை. ஆண்டுதோறும் 70 கடைகள் வரை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்குத் திறக்கப்படும். இந்த ஆண்டு 50 கடைகள் மட்டுமே திறக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். நேரில் பட்டாசுகளை வாங்குவதன் மூலம் விபத்துக்களைத் தவிர்க்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.