சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூர் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் என்ற கிரைம் சுரேஷ். இவருக்கு வயது 30. சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. பின்னர் அப்பகுதியில் மனைவி, தாய், தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில சமூக விரோத செயல்களை செய்து வந்துள்ள சுரேஷ், தற்போது அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கடந்த 14-ம் தேதி பாடி அருகே இருக்கும் சாலையோர கடையில் இட்லி சாப்பிடச் சென்றார். பின்பு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சுரேஷின் தாயார் கொரட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மீது கொரட்டூர் போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என்று அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்திலும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கடந்த சில நாட்களாக தினமும் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை, பாடி அருகில் சுரேஷின் ஆட்டோ மட்டும் தனியாக நின்றுள்ளது. தனியாக நின்ற ஆட்டோ சுரேஷோட ஆட்டோ என்று அவரது நண்பர் சுரேஷின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்பு சுரேஷின் தாயார் மீண்டும் கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் எனது மகன் ஆட்டோ தனியாக இருக்கிறது. இது பற்றி விசாரியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் பாடி கலைவாணர் நகரில் இட்லி கடை நடத்தி வரும் அம்மு என்ற கார்த்திகா மீது சந்தேகம் இருப்பதாகவும் சுரேஷின் தாயார் தெரிவித்துள்ளார். இதன் பின்பு அம்மு என்ற கார்த்திகாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் பிழைப்பு தேடி புதுக்கோட்டையிலிருந்து சென்னை வந்துள்ளார் கார்த்திகா. அப்போது சுரேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை அடுத்து கார்த்திகாவிற்கு சுரேஷ் இட்லி கடை வைத்து கொடுத்துள்ளார். இந்த கடைக்கு தினமும் இரவு சுரேஷ் சாப்பிட வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை தட்டிக் கேட்ட தனது தாய்மாமனையே கொலை செய்ததாக சுரேஷ் மீது தற்போது வரை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக தொடர்ந்த நிலையில், திடீரென சுரேஷிடம் பேசுவதை கார்த்திகா தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இட்லி கடையில் சாப்பிடும் போது, அங்கு வந்த ஒருவரிடம் அம்மு சிரித்து சிரித்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கடையிலேயே அம்முவிடம் சண்டை போட்டுள்ளார். மேலும், கடையில் இருந்த கத்தியை எடுத்து அம்முவின் தொடையில் குத்தியும் மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்மு தனது கணவர் ஜெயகொடியிடம் நடந்ததை கூறியுள்ளார். அவர் தனது நண்பர்கள் ராஜா சுந்தரகாண்டம் ஆகியோருடன் சேர்ந்து சுரேஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
பின்னர் 14-ம் தேதி இரவே சுரேஷை வீட்டுக்கு வரவைத்த அம்மு, மயக்க மருந்து கலந்த இட்லியை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சுரேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதை அடுத்து அவரை வீட்டிலேயே அடித்து 4 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். உடலை அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டு, தலையை செங்குன்றம் அருகே உள்ள கால்வாயிலும் வீசியுள்ளனர். இந்த தகவல் அறிந்த போலீஸார், கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா, சுந்தரகாண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடலை எடுத்துச் சென்ற ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதனிடையே செங்குன்றம் போலீசார் வடபெரும்பாக்கம் அருகே வீசப்பட்ட சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுரேஷின் தலையை கொளத்தூர் மற்றும் செங்குன்றம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.