கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சோழதரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வானமாதேவி கிராமத்தில் சாலையோரம் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை, சாலை விரிவாக்கத்திற்காக இடிக்க அதிகாரிகளும், பாதுகாப்பிற்காக போலீசாரும் கடந்த சனிக்கிழமை (04.12.2021) அன்று அப்பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்களுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக சாலையோரம் இருக்கும் கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதன்படி வானமாதேவி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் முகப்பை இடிப்பதற்கு அதிகாரிகள் முற்பட்டனர். அப்போது அங்கு வந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், ஏற்கனவே கால அவகாசம் கொடுத்துவிட்டுத்தான் தற்போது இடிக்கும் பணியில் ஈடுபடுகிறோம் எனத் தெரிவித்ததை அடுத்து மக்கள் அமைதியாகினர். அதன்பிறகு அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் கொண்டு அக்கோயிலின் முகப்பை இடித்தனர்.
மேலும், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை தற்போது இடிக்கக் கூடாது. மேலும் கால அவகாசம் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து பள்ளி கட்டடத்தை இடிக்க ஒருவார கால அவகாசம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.