ஆடிட்டர் அலுவலக ஊழியரிடம் 19.5 லட்சம் கொள்ளை
பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் டிரங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தவமணிகண்டன் (23). மதுரவாயலில் உள்ள தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் பணம் வசூலிப்பவராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் வங்கியிலிருந்து 19 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் வந்துள்ளார். மதுரவாயல் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் வந்தபோது, எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், தவமணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் கத்தியால் அவரது கையை கீறி கைப்பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பினர். இதுகுறித்து மதுரவாயல் போலீசில் தவமணிகண்டன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.