நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.
வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.