அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (25.10.2023) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் தேர்வானது (TET Exam) 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த தேர்வுக்கு தகுதியுடையவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ் பாடப்பிரிவில் 394 பேரும், ஆங்கில பாடப்பிரிவில் 252 பேரும், கணிதத்தில் 233 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 292 பேரும் என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது மட்டுமின்றி வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 2012 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5.5 மதிப்பெண்களும், 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்களும், 2014 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4.5 மதிப்பெண்களும், 2017 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மதிப்பெண்களும், 2019 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 2022 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 0.5 மதிப்பெண்களும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதில் பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும், இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.