![Attempted robbery by breaking ATM machine; theft from nearby shops when cash was not available](http://image.nakkheeran.in/cdn/farfuture/e_vBwTALQJt8Ol22yVjP4DGxsSqBmgYkG-rO2WrVdpo/1695953633/sites/default/files/inline-images/a1674_0.jpg)
கள்ளக்குறிச்சியில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முடியாத விரக்தியில் அந்த நபர்கள் அந்த தனியார் ஏடிஎம் மையத்திற்கு அருகில் இருந்த பழக்கடை மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடத்தி வந்த பல்பொருள் அங்காடி கடைகளை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் திருடியவர்கள் அந்த பகுதியில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பியுள்ளனர். உடனடியாக இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையத்திலேயே தனியார் இயந்திரம் ஏடிஎம் உடைக்கப்பட்டதோடு அருகில் இருந்த கடைகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.