கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்திற்கு அருகேயுள்ள அகிலாண்டபுரம், தாண்டவன்குப்பம், பழைய தாண்டவன்குப்பம், ஆதாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராமங்களை என்.எல்.சி. நிர்வாகம், சுரங்க விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கிராமங்களை சேர்ந்த சுமார் 300- க்கும் மேற்பட்டோர் என்.எல்.சி நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 30 வருடங்களாக தங்கள் கிராமத்தின் அருகேயுள்ள பகுதிகளை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்திய நிலையில் உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் வழங்காத பட்சத்தில் மீண்டும் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்வதை கைவிட வேண்டும் என்றும், மீறி என்.எல்.சி இக்கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த முயற்சித்தால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.