நேற்று காஞ்சிபுரத்தில் பெண் காவலரை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். அங்கு பணியாற்றி வரும் பெண் காவலரான டெல்லி ராணி வழக்கமாக நேற்று பணியை முடித்துவிட்டு உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி அருகே அவருடைய கணவர் மேகநாதன் வழிமறித்து டில்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை சரமாரியாக தாக்கினார்.
ரத்த வெள்ளத்தில் அலறியடித்த டெல்லி ராணி இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலர் டெல்லி ராணியை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீருடையில் இருந்த பெண் காவலர் கணவராலே கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெண் போலீசார் மீது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற மேகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.