செங்கல்பட்டில் 108 ஆம்புலன்ஸில் டிரைவர் வேலை பார்க்கும் மருதுபாண்டி என்பவர் தாக்குதலுக்கு ஆளாகி காயமுற்ற நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டுள்ளது.
செங்கல்பட்டில் வேலைபார்த்த மருதுபாண்டி திருவிழாவுக்காக சொந்த ஊரான அருப்புக்கோட்டை தாலுகா-சவ்வாஸ்புரம் வந்துள்ளார். அப்போது கருப்பசாமி என்பவர் “உன் மனைவிக்கும் உறவினரான விஜயகுமாருக்கும் தவறான பழக்கம் இருக்கிறது..” என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு, கருப்பசாமியை வைத்துக்கொண்டே விஜயகுமாரிடம் ‘என் மனைவிக்கும் உனக்கும் தொடர்பு இருக்கிறதா?” எனக் கேட்டிருக்கிறார் மருதுபாண்டி. பதில் எதுவும் சொல்லாமல் அந்த இடத்திலிருந்து கிளம்பியிருக்கிறார் விஜயகுமார்.
அதனால் ஆத்திரமான கருப்பசாமி “நான்தானே விஷயத்தை உன்னிடம் கூறினேன். அதை ஏன் விஜயகுமாரிடம் கேட்டாய்?” என்று பிரச்சனை செய்து அநாகரிகமாகப் பேசி, அங்கு கிடந்த வேலிமுள் கம்பால் மருதுபாண்டியை அடித்திருக்கிறார். கருப்பசாமியோடு சேர்ந்துகொண்டு உறவினரான ராமரும் மருதுபாண்டியைத் தாக்கியிருக்கிறார். காயமுற்ற மருதுபாண்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருதுபாண்டி அளித்த புகாரின் பேரில் திருச்சுழி காவல்நிலையத்தில் கருப்பசாமி மற்றும் ராமர் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது.