விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள நகர் கிராமத்தை சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அசோனா (20). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சரோஜினி நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
அசோனா வழக்கம் போல வேலைக்கு செல்லும் போது பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்மநபர், கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தவரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் இளம்பெண்ணை கத்தியால் குத்திய மர்மநபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கொங்கராயம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தவசீலன் என்பவரின் மகன் பிரபாகரன் என்றும், இவரும் அசோனாவும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், கோயிலில் மாலை மாற்றிக்கொண்டதாவும், இரு வீட்டு பெரியவர்கள் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அசோனாவை வேலைக்கு போகக்கூடாது, படிக்க வைக்கிறேன் என்று கூறிய நிலையில் அசோனா மீறி வேலைக்கு சென்றதாலும், தன்னுடன் பேசுவதை தவிர்த்ததாலும் ஆத்திரமடைந்து பயமுறுத்துவதற்காகவே கத்தியால் கீறினேன் என கூறியுள்ளார். பிரபாகரனை கைது செய்த செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.