சிதம்பரம் நகரில் திரையரங்கிற்கு வெள்ளிக்கிழமை இரவு சினிமா பார்க்கச் சென்ற குடும்பத்தினரை, திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யாசாமி மகன் சிரஞ்சீவி (29) மற்றும் அவரது அண்ணன் பழனிசாமி மற்றும் ராமராஜன், பானுமதி, லட்சுமி, குழந்தைகள் கார்த்திகேயன், சந்தோஷினி ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணி காட்சி சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் சினிமா பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற பொழுது அங்குள்ள ஊழியர்கள் சிரஞ்சீவி என்பவரை நீ குடித்து இருக்கிறாயா என்று கேட்டுள்ளார்கள். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் குடிப்பழக்கம் இல்லை என்றும், நீங்கள் தான் குடித்து உள்ளீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திரையரங்கு ஊழியர்கள் அரவிந்தன், சுகந்தன், ராகுல், மாதவன் உள்ளிட்டோர் சேர்ந்து சீரஞ்சிவி அவரது அண்ணன் பழனிசாமி, ராமராஜன் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சிரஞ்சீவி, பழனிசாமி, ராமராஜன் ஆகியோர் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டுள்ளது. இது குறித்து சிரஞ்சீவி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிதம்பரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சுகுந்தன் (22), மேல வன்னியூர் விளத்தூர் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராகுல் (22), சிவபுரி வடபாதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் அரவிந்தன் (38), புளியங்குடி இந்திரா நகரைச் சேர்ந்த தமிழ்மாறன் மகன் மாதவன் (22) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஆர்.சுகுந்தன் மற்றும் ஆர்.ராகுல், மாதவன், அரவிந்தன் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.