![Atrukaal festival celebrated in kanyakumari](http://image.nakkheeran.in/cdn/farfuture/M5MwNoufAIhzjTixrf8Pr6u3RaHNpY5Uix659mFVIJc/1614423356/sites/default/files/inline-images/th_656.jpg)
கேரளா, திருவனந்தபுரத்தில் நடைபெறும் ‘ஆற்றுக்கால் பொங்கல்’ உலக அளவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் மாசி மாதம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். இவ்விழாவின் 10வது நாளில், பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். இந்தப் பொங்கல் திருவிழாவில் உலகின் பல நாடுகள் மற்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் அங்கு சென்று பொங்கலிட்டு வழிபடுவார்கள்.
இதில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் அதிலும் குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சென்று பொங்கலிடுவார்கள். பல லட்சம் பெண்கள் அங்கு குவிந்து கோவில் வளாகம் மற்றும் சாலைகளில் பொங்கலிடுவார்கள். இதனால் திருவனந்தபுரம் மாவட்டம் குறிப்பிட்ட மணி நேரம் வரை புகை மூட்டமாகவே காணப்படும்.
கடந்த ஆண்டு 35 லட்சம் பெண்கள் பொங்கலிட்டதாகவும், இந்த ஆண்டு 40 லட்சம் பேரை எதிர்பார்ப்பதாகவும் கோவில் நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், கரோனா தொற்று கேரளாவில் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இந்த ஆண்டு பொங்கல் இடுவதற்குத் தடை விதித்தது. இதனால், பாரம்பரியமாக இடப்பட்டுவந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா, இன்று (27-ம் தேதி) நடத்தப்படவில்லை. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் ஒரே ஒரு பானையில் மட்டும் பண்டார அடுப்பில் (தாய் அடுப்பு) வைத்து பொங்கலிட்டனர். மேலும் பக்தர்களையும் அங்கு அனுமதிக்கவில்லை.
ஆற்றுக்காலில் பொங்கால் வைக்கமுடியாததால், கேரளா எல்லையான குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையை அடுத்த வடக்குத் தெருவில், சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஆற்றுக்கால் பகவதியம்மனை நினைத்துப் பொங்கலிட்டு வழிபட்டனர்.