கீரமங்கலம் பகுதி ஏ.டி.எம். இயந்திரங்களில் பல நாட்களாக பணம்
இல்லாதததால் வாடிக்கையாளர்கள் அவதி
கீரமங்கலம் மற்றும் வேம்பங்குடியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில்பல நாட்களாக பணம் இல்லாததால் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன்திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஏ.டி.எம். இயந்திரங்கள் :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடியில் 3 ஏ.டி.எம். இயந்திரங்கள் செயல்பட்டு வந்தது. இந்த இயந்திரங்களில் எப்போதும் பணம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப அவசரத்திற்கு பணம் எடுத்துக் கொண்டனர்.
அதன் பிறகு பணம் மதிப்பிழப்பு பிரச்சனை வந்த பிறகு ஒரு மாதம் வரை அனைத்து ஏ.டி.எம். இயந்திரங்களும் செயல்படாமல் கிடந்தது. ஒரு மாதத்திற்கு பிறகு செயல்படத் தொடங்கிய பிறகு ஓரளவு வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
பணம் இல்லாத இயந்திரங்கள் :
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கீரமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் வாரத்தில் சில நாட்கள் மட்டும் பணம் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் எடுத்தனர். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வாரத்தில் ஒரு நாள் கூட பணம் வைப்பதில்லை. அதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் அவசரத் தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ரூபாய்; 4 ஆயிரத்திற்கு மேல் பணம் வராது :
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூபாய்;. 4 ஆயிரத்திற்கு மேல் பணம் வெளியே வராது அதனால் 3 முறை ஒரே நேரத்தில் பணம் எடுத்த பிறகு அதற்கு சேவைக் கட்டணம் எடுக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை அதிகமாக இழக்க நேரிடுகிறது.
கடந்த ஒரு மாதமாக கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மொய் விருந்துகள் நடப்பதால் பொதுமக்கள் அவசரமாக வங்கிக்கு சென்று பணம் எடுக்க காலதாமதம் ஆகிறது என்பதால் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் எடுக்க சென்றால் பணம் இல்லை என்ற பதில் கிடைப்பதால் மொய் செய்யும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணம் இருந்தும் வட்டிக்கு வாங்கும் நிலை :
இது குறித்து கீரமங்கலம் பகுதி பொதுமக்கள் கூறும் போது. வங்கி கணக்கில் பணம் இருப்பதால் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்கள் வங்கியில் நீண்ட நேரம் நிற்பதை தடுக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். அட்டைகளை வழங்கி உள்ளது. ஆனால் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் இல்லாததால் பெருத்த ஏமாற்றம் ஏற்படுகிறது. அதனால் குறிப்பிட்ட நாளில் மொய் செய்ய வேண்டும் என்பதால் அவசரத் தேவைக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. வங்கியில் பணம் இருந்தும் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு வங்கி வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் தங்கள் வாடிக்கையாளர்களை சிரமத்தில் இருந்து காப்பாற்ற வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-இரா.பகத்சிங்