
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், “இன்று இந்தியாவே உங்களை பார்க்கிறது. உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள், இன்று முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். திமுக தோன்றிய காலத்தில் இருந்து வீழ்த்திட வேண்டும் என பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது.
தமிழகத்தின் அரை நூற்றாண்டின் தலைப்பு செய்தியாக இருந்தவர் கலைஞர். 360 டிகிரியிலும் விமர்சனம் செய்தனர். பெரியாரை அண்ணா செழுமைப் படுத்தினார். அதனை கலைஞர் வலிமைப் படுத்தினார். அதனை நீங்கள் (ஸ்டாலின்) முழுமைப் படுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற துடிக்கிறார்கள். இந்தியாவின் தலைநகர் வாரணாசி ஆக்கப்படும். வர்ணாசிய தர்மம் தான் அரசியலமைப்பு சட்டம் என்றால் இந்தியா தாங்காது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால் ஒரே நம்பிக்கை நீங்கள் தான். நீங்கள் தமிழக தலைவர் அல்ல, துணிச்சலாக இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளுங்கள், நாங்கள் உங்களோடு உள்ளோம்” என திருமாவளவன் தெரிவித்தார்.