வேலூர் மாநகராட்சி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. அந்த வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டித்தள்ளுவதால் காயமடைந்து வருகின்றனர்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பி வந்தனர். பொதுமக்களின் புகாரை அடுத்து மேயர் சுஜாதா உத்தரவின் பெயரில் இன்று மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சாலையில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு தலா ரூ 1000 அபராதமும், மாட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அபராதம் கட்டிவிட்டு மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச் செல்லலாம். அதுவரை பிடிக்கப்பட்ட மாடுகள் கோசாலையில் இருக்கும் என அங்கே ஒப்படைக்கப்பட்டன. கோசாலையில் நாள்தோறும் மாட்டின் பராமரிப்பிற்காக 250 கட்டணம் செலுத்த வேண்டும் என மாட்டின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை வேலூர் மாநகர மேயர் சுஜாதா நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறும்போது, மாநகர சாலைகளில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் இன்று பிடித்தனர். அபராத தொகை கட்டியவுடன் மாடுகள் விடுவிக்கப்படும். மாட்டின் உரிமையாளர்கள் யாரும் சாலைகளில் மாடுகளை விடக்கூடாது. இனி சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.