சிதம்பரம், ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 21 நாட்களாக மருத்துவ மாணவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் வகுப்பை புறக்கணித்து நூதன போராட்டத்தில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வந்தனர்.
மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு விடுதியில் உணவு வழங்குவதை நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட்ட களத்திலேயே உணவு ஏற்பாடு செய்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மே 1-ந்தேதி சென்னையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள், மருத்துவ மாணவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க தலைவர் ரவீந்திரநாத் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மருத்துவ மாணவர்களின் கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டு மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.