கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாகப் பேசிய ஆசிரியர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுமருதி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அருண் என்பவர் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுப்பில் சென்றபோது, பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்துள்ளார்.
கடந்த 26- ஆம் தேதி, அனைத்து ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. அப்போது அருண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் பற்றி அவதூறாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து, நவ. 27- ஆம் தேதி, அப்பள்ளியில் அனைத்து ஆசிரியர்களிடம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலரை பட்டதாரி ஆசிரியர் அருண் தரக்குறைவாகப் பேசினார் என்று கூறியுள்ளனர். எழுத்து மூலமாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அருணும், தான் பேசியதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் 1973- ன் கீழ், உயர் அதிகாரியை அவதூறாகப் பேசி, ஆசிரியர் பணிக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, ஆசிரியர் அருணை அதிரடியாக தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.