பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுரை செய்வதை விடுத்து, அதை தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை மூட வேண்டும். என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளாஸ்டிக் பொருட்களால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைகிறது என்று பிரதமரும், முதலமைச்சரும் மற்றும் அமைச்சர்களும் அவ்வபோது மக்களுக்கு அறிவுறுத்துவது தொடர்கதையாகிவிட்டது. சமூக ஆர்வலர்களும் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளால் ஏற்படும் விளைவுகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களாக மாறி இருப்பதால் நாளுக்குநாள் இதை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கும் தன்மையற்ற இந்த பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் இயற்கை மற்றும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை உபயோகப்படுத்திவிட்டு ஆங்காங்கே எறிந்துவிட்டு செல்வதை அனைவரும் பார்க்கிறோம்.

இந்த பொருட்கள் அதிக அளவில் கழிவுநீர் கால்வாய்கள் வழியே சென்று ஆறுகளின் மூலம் கடலில் கலக்கிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக தன்னார்வல அமைப்புகள் இணைந்து கோவை மாவட்டத்தில் பேரூர் நொய்யல் ஆற்றுப்பகுதியில் மட்டும் 4 டன் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகளை அகற்றி இருக்கிறார்கள்.
நொய்யல் ஆற்றின் ஒரு பகுதியில் மட்டும் 4 டன் கழிவுகள் என்றால், இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் நினைத்து பார்க்க முடியாத அளவு கழிவுகள் இருக்கும். இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரும் பாதிப்புகளை சந்திக்கும் நிலை உருவாகும். மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதியை கொடுத்துவிட்டு மக்களை பயன்படுத்த வேண்டாமென்று கூறுவது தீர்வுக்காண வழியில்லை.
மதுவை அரசே தயாரித்து விற்பனை செய்துவிட்டு, மது குடிப்பதால் தீங்கு ஏற்படுகிறது என்று சொல்வதை போல, பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதியை வழங்கிவிட்டு மக்களை பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி அவர்கள் அறிவுறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்.
மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுகின்ற கேடுகளை ஆட்சியாளர்கள் உணர்ந்து உடனடியாக பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்து இழுத்து மூடுவது மட்டும்தான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்கும். எனவே இந்த உத்தரவை வருகின்ற உலக சுற்றுச்சூழல் தினத்தில் பிரதமர் மோடி அவர்கள் வெளியிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.