கடந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி மும்பையிலிருந்து கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் பலமுறை நீதிமன்றத்தை நாடிய நிலையில் கைது செய்யப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. மேலும், சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் ஆரியன் கானுடன் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. மும்பை வடக்கு மண்டல துணை இயக்குநர் ரவி போரா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழுவினர் ஆர்யன் கான் தொடர்பான வழக்கைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக விசாரித்து வந்தனர். இக்குழுவினர் இன்று அளித்துள்ள அறிக்கையில், " ஆர்யன்கான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்றும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஆர்யன் கானுக்கும் தொடர்பு இல்லை" என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கிலிருந்து ஆர்யன்கான் விடுவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.