தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரின் மிகச் சிறப்பான திட்டமாகும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டம் தற்போது பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 வகை பிரிவினர்களுக்குத் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் நடைபெற்றது. திருச்சி மாவட்ட அளவிலான தடகளம், கபடி, இறகுப் பந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்து பந்து, சிறப்பு கையுந்து பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், மேசைப் பந்து மற்றும் எறி பந்து போட்டிகள் 12.02.2023 முதல் 28.02.2023 வரை அண்ணா விளையாட்டரங்கம் ஜே.ஜே. பொறியியல் கல்லூரி மற்றும் ஜமால் முகமது கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டிகளில் 5 பிரிவுகளிலும் 3912 ஆண்கள் மற்றும் 1879 பெண்கள் என மொத்தம் 5791 நபர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கி பாராட்டினார்கள். இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக தலா 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக தலா ஆயிரம் ரூபாய் என மொத்தம் 41 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, "திருச்சி மாவட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் முழுமையாக பணிகள் முடிக்கப்படும். புதிய காவிரி பாலம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடிக்கல் நாட்டுவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அனுமதி கேட்டுள்ளோம் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் நடைபெறும். முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள் விரைவில் முழுவீச்சில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், செளந்தர பாண்டியன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயஸ் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.