ஒரு கிராமத்தில் நடக்கும் திருவிழா, மஞ்சுவிரட்டு என எந்த நிகழ்வானாலும் பக்கத்து கிராமங்களில் இருந்து ஊர்வலமாகச் சென்று மரியாதை செய்யும் பழமையான பழக்கவழக்கங்கள் இன்றளவும் குறைவின்றி தொடர்ந்து கொண்டிருப்பதால் கிராமங்களுக்கிடையேயான நல்லுறவுகளும் நன்றாகவே உள்ளது. இப்படி பல வருடங்களாக தங்கள் மூதாதையர் செய்த இரு கிராமங்களுக்கிடையேயான பழக்க வழக்க நடைமுறை இரு மாவட்டங்களுக்கிடையே நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் உள்ள குமரமுடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்திலிருந்து மஞ்சுவிரட்டு காளைகளுக்கான வேட்டி, துண்டுகளை சீராக கொண்டு சென்று கொடுத்துள்ளனர்.
உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோவில் மஞ்சுவிரட்டு தேதி குறித்ததும் கண்டியாநத்தம் கிராமத்திற்கு தகவல் சொல்லிவிடுவார்கள். மஞ்சுவிரட்டு நாளில் கண்டியாநத்தம் கிராம மக்கள் சேர்ந்து கோவில் வீட்டில் ஒன்றுகூடி குலதெய்வ வழிபாடு செய்து வத்துமலை ராசு சாமியாடி அரிவாள் மீது நின்று கிராமத்திற்கும் கிராமத்தினருக்கும் அருள்வாக்கு சொல்லி விபூதி கொடுத்த பிறகு உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோவில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கான வேட்டி, துண்டுகளை சீராக எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு அவர்களுக்கான மரியாதை செய்து சீர் பெற்றுக் கொண்டனர். இந்த பழக்கவழக்கம் பல தலைமுறைகளாக நடப்பதால் கிராமங்களுக்கிடையேயான நட்புறவும் இன்றுவரை குறைவில்லாமல் தொடர்கிறது என்கின்றனர். அடுத்தடுத்த கிராம மக்களுக்கிடையே பகைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக தங்கள் ஊர் நிகழ்ச்சிகளுக்கு பக்கத்து கிராமத்தினர்களை அழைத்து மரியாதை செய்து விருந்து உபசரிப்புகள் கொடுத்து வந்தனர். இதனால் உறவுகள் மேம்பட்டது. எங்கோ சில கிராமங்களில் இந்த பழக்க வழக்கங்கள் மாறிப் போனாலும் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.