
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் அ.தி.மு.க.விற்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திவந்த நிலையில், இன்று சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கிய குற்றவாளியான அருளானந்தம் அ.தி.மு.க. பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது. அதில் முதல் குற்றவாளியாக கருதப்படும் அருளானந்தம், அ.தி.மு.க.வின் பொள்ளாச்சி மாணவரணிச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். இந்த கைதின் எதிரொலியாக அ.தி.மு.க.விலிருந்து அவர், அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலக்கப்படுவதாகவும் அவர் வகித்த மாணவரணிச் செயலாளர் பதவியில் இருந்தும் அவர் விலக்கப்படுவதாகவும் கட்சிக்காரர்கள் ஒருபோதும் இனி அவரோடு எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கையெழுத்திட்டு உத்தரவிட்டுள்ளனர்.