நேற்று சென்னையில் நடைபெற்ற 'கமல் 60' நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எங்களின் கொள்கைகள், சித்தாந்தங்கள் மாறலாம். ஆனால் எங்கள் இருவரின் நட்பு எப்போதும் தொடரும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வராவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நான்கைந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அதுபோல தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பத்து நாள் அமெரிக்கச் சுற்றுப் பயணத்திற்கு பிறகு தமிழகம் வந்த துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அமெரிக்க சுற்றுப் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். பத்து நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் சிறப்பாக முடிந்துவிட்டது. தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்காக உலக வங்கி 5 ஆயிரம் கோடி நிதி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
மேலும், அவர் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என்றார்.