
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-16-ஆம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தில் 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது என நீண்ட இழுபறி நீடித்தது.
இதற்காக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக அரசு பரிந்துரைத்த மதுரை - தோப்பூரில் உள்ள 200 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு சென்றார். அப்போதும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்த அறிவிப்பு தாமதமடைந்தது.
இந்நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என்பதை உறுதி செய்தார். இது தொடர்பாக அவருக்கு மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளதாக கடிதம் ஒன்றையும் அவர் படித்துக் காட்டினார்.