‘என் குழந்தையை என்கிட்ட கொடுத்துடுங்க..’ என்பது போல், தனது குட்டியை அழைத்துச் சென்றதால், கார்ப்பரேஷன் வாகனம் பின்னாடியே ஓடிவந்த தாய்க்குத்திறையின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாநகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். மேலும், மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் தென்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மாடுகளும், குதிரைகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இத்தகைய கால்நடைகளும், குதிரைகளும் இரவு, பகல் என நேரம் பாராமல் சுற்றித்திரிவதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மதுரையில் வைகை, தென்கரை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், குதிரைகளை சாலையில் நடமாடவிட்ட அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில், ஒரு குட்டித் குதிரையை வாகனத்தில் பிடித்துச்சென்றனர். அப்போது அதைப்பார்த்த தாய் குதிரை தனது குட்டியைப் பிரிய மனமில்லாமல் வாகனத்தின் பின்னாலேயே ஓடி வந்தது. இதைப்பார்த்த சாலை வாசிகள், ஆச்சரியத்தில் வாயை பொளந்தனர். மேலும், அந்த தாய் குதிரை தென்கரை பகுதியிலிருந்து மாநகராட்சி கால்நடை காப்பகம் வரை மாநகராட்சி வாகனத்தின் பின்னாலேயே ஓடி வந்து தனது குட்டியுடன் சேர்ந்தது.