அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ் இன்று முதல் முறையாக ஆஜராகினார். அவரிடம் பல்வேறு கேள்விகள் ஜெயலலிதா தொடர்பாக கேட்கப்பட்டது. காலையில் அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு எனக்கு தெரியாது, அதுபற்றி என்னிடம் யாரும் கூறவில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக 2016ஆம் ஆண்டு செப்.22ஆம் தேதி ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தெரியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவரை நான் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற விசாரணையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை தான் அகற்றச் சொல்லவில்லை என்றும், எதற்காக அகற்றினார்கள் என தனக்கு தெரியாது என்றும் கூறினார். மேலும் தான் தர்ம யுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதல்வராக பொறுப்பேற்கும் வரை நான் பேட்டிகளில் பேசியது அனைத்து உண்மை என்று பன்னீர் செல்வம் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இன்று அவரிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு தெரியாது, நான் அவரிடம் கூறினேன் என்று பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். மேலும் நாளை அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. அந்த விசாரணையிலும் இதே பாணியில் அவர் பதில் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.