கடலூர் மாவட்டம் ராமநத்தம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வரும் ஆவட்டி கிராமத்தில் சுரேஷ் குமார் என்பவர் மருந்தகம் நடத்தி வந்தார். அதேநேரம் இவர் மருத்துவராகவும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் போலி மருத்துவர் என புகார் எழுந்தது. இதுகுறித்து திட்டக்குடி மருத்துவமனைக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவருக்குச் சொந்தமான இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த இந்த ஆய்வில் சுரேஷ்குமார் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜாமீனில் வந்த சுரேஷ் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஆவட்டி பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுக்கு கருக்கலைப்புக்காக மருந்து கொடுத்திருக்கிறார். இதனால் கஸ்தூரி என்ற அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டார். உடனே கஸ்தூரி திட்டக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆவட்டியில் உள்ள சுரேஷ்குமார் என்பவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டுத்தான் எனக்கு இந்தநிலை ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஜாமீனில் வெளிவந்த சுரேஷ் ராமநத்தம் காவல்நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிலையில், ஜாமீன் கையெழுத்துப் போட வந்த சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு கடலூர் மாவட்ட இணை இயக்குநர் ரமேஷ் பாபு தலைமையில் அவருக்குச் சொந்தமான மருந்தகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து அந்த ஆய்வகத்திற்கு சீல் வைத்துவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.