காஷ்மீரில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் அண்மையில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் தன்னுடைய மனைவியை சிலர் தாக்குவதாகவும், அவர் வைத்திருக்கும் கடையை காலி செய்ய மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மறுப்பு தெரிவித்து விளக்கமளித்திருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி கீர்த்தி ரேணுகாம்பாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பொம்மை கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று சிலர் அந்தக் கடையை காலி செய்யச் சொல்லி அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதோடு கீர்த்தியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர் பிரபாகரன், தங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பு அளிக்குமாறு மண்டியிட்டு வீடியோ வெளியிட்டார். அதில், “அரை நிர்வாணமாக்கி என்னுடைய மனைவியை அடித்திருக்கிறார்கள் ஐயா. இது எந்த உலகத்தில் நியாயம் பாருங்க. ஐயா காப்பாத்துங்க ஐயா” என்று வெளியிட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், ''ராணுவ வீரர் மனைவி வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த கடை காலி செய்யாததால் தகராறு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் தரப்பினர் கத்தியால் தாக்கியதால் எதிர்த்தரப்பினர் கடையைச் சேதப்படுத்தி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ராணுவ வீரரின் மனைவியை யாரும் மானபங்கப்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. ராணுவ வீரருக்குத் தவறான தகவல் கொடுக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. இருப்பினும் இரண்டு தரப்பிலும் புகார் கொடுத்து இருக்கிறார்கள். தொடர்ந்து நாம் வழக்குப் பதிவு செய்துள்ளோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த ராணுவ வீரர் தன் நண்பருடன் பேசிய மற்றொரு ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், “நான் எந்த அளவுக்கு எறங்கி வேலை செஞ்சிருக்கேன்னு இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு தெரியவரும். எல்லாம் முடிஞ்சிருச்சு. தமிழ்நாடு முழுக்க பேசப்போவுது. இதான் உண்மை, இதான் நடந்துச்சுனு அங்க ஒன்னுக்கு ரெண்டா சொல்லுங்க. கிட்டத்தட்ட 6 கோடிக்கும் மேல பார்த்திருக்காங்க. நாம் தமிழர், பாஜகனு எல்லாருக்கும் அனுப்பிட்டேன். 10ல் இருந்து 20 பேரையாவது ரெடியா வச்சிக்கோ. என் தங்கச்சிய அரைநிர்வாணம் செய்து அடிச்சாங்க. நான் அடிக்கக்கூடாதானு கேளுங்க. கத்தியால குத்தினத சொல்லாதீங்க. இது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அவர் கடை கொடுத்தாலும் நமக்கு வேண்டாம். மானம் தான் முக்கியம். என்கிட்ட எத்தனை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பேசினாங்க தெரியுமா. முக்கியமான அரசியல் புள்ளி ஒன்னு பேசிருக்கு. அதை சொல்லக்கூடாது” என ராணுவ வீரர் பேசுகிறார்.
இந்த ஆடியோவின் மூலம் மனைவியை அரைநிர்வாணமாக்கி அடித்ததாக அவர் சொன்னது பொய் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்களுக்கு ராணுவ வீரரின் இந்த ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.