பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 43). இவர் கடந்த 23 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்துவந்தார். இவருக்குத் திருமணமாகி ஜெகதீஸ்வரி (37) என்ற மனைவியும், விஷால் (11), ரித்தியன் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கடைசியாக மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்துவந்த சங்கர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் காரை கிராமத்திற்கு வந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் பணிக்குத் திரும்பினார். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு சிக்கிம் - லாட்சங் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இத்தகவலை ராணுவ அதிகாரிகள், சங்கரின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சங்கரின் உடல், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் (12.07.2021) மாலை சென்னைக்கு வந்தடைந்த அவருடைய உடல், அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் காரை கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக சங்கரின் உடல் வைக்கப்பட்டது.
அப்போது, அவருடைய உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட எஸ்.பி. மணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று மதியம் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் சங்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் சங்கர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.